கண்ணதாசன் சொல்லியும் கேட்காத சாவித்ரி… அந்த ஒரு தவறான முடிவால் வாழ்க்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி!

By vinoth on ஆவணி 19, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு இணையான நடிப்பாற்றலைக் கொண்டவர் சாவித்ரி. அதனால்தான் அவரை திரையுலகினரும் ரசிகர்களும் நடிகையர் திலகம் என்று அழைத்தனர். ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்ட அவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து புகழ்பெற்றார்.

சாவித்ரிக்கும் மற்ற நடிகைகளுக்கும் உள்ள வித்தியாசமே சாவித்ரி ஒரு பல்துறை வித்தகர் என்பதுதான்.  அவர் படத் தயாரிப்பு மற்றும் இயக்கம் என தான் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்தர். ஆனால் அதுவே அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

   

தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் செலவு செய்து பிராப்தம் என்ற பெயரில் சிவாஜி கணேசனை வைத்து படம் தயாரித்து இயக்கி வெளியிட்டார். இப்படம் படுதோல்வி அடைந்தது. அதனால் அந்த கடன் பிரச்சனைகளைத் தீர்க்க அடுத்தடுத்து சில படங்களை தயாரித்தார். ஆனால் அனைத்தும் அவருக்கு தோல்வியையேக் கொடுத்தன. இதனால் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல்நலனைக் கெடுத்துக் கொண்டார்.

   

இந்த படம் எடுப்பதற்கு முன்பே அவரின் கணவரான ஜெமினி கணேசன் படம் இயக்கி தயாரிக்காதே எனக் கூறியுள்ளார். ஆனால் அவர்களுக்குள் அப்போது கருத்து வேறுபாடு இருந்ததால் சாவித்ரி அவர் பேச்சைக் கேட்கவில்லை. அதனால் ஜெமினி கணேசனும் ஒதுங்கிக் கொண்டுள்ளார்.

 

அதன் பின்னர் கண்ணதாசன் சாவித்ரியிடம் “நான் படம் எடுத்தபோது என்னருகே இருந்தவர்கள் எல்லோரும் என்னை ஏமாற்றினார்கள். கடைசியால் நான் காலியானேன். உன் பக்கத்தில் இப்போது இருப்பவர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். அதனால் சொந்தப் படம் மட்டும் எடுக்காதே” எனக் கூறியுள்ளார். ஆனால் சாவித்ரி அவரின் பேச்சையும் கேட்கவில்லை.

தமிழ் சினிமாவில் நல்ல கலைஞர்களாக இருந்தும் சொந்தப் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் கையை சுட்டுக்கொண்டு வீழ்ச்சியை சந்தித்தவர்கள் இருவர். ஒருவர் சந்திரபாபு மற்றொருவர் நடிகையர் திலகம் சாவித்ரி.