சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில், 12 வயது தங்கையின் கண் அறுவை சிகிச்சைக்காக 16 வயது சிறுவன் ஜெய்சிங் ரத்தோட் என்பவர் வெளியிட்ட உருக்கமான பதிவு, இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தங்கைக்குக் கண் அழுத்தம் மற்றும் விழித்திரை இரத்தப்போக்கு பாதிப்பு இருப்பதாகவும், டெல்லியில் உள்ள பிரபல ‘ஷ்ராஃப் கண் மையத்தில்’ அவசர அறுவை சிகிச்சை செய்ய ரூ.1.2 லட்சம் தேவைப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். இதை நம்பி இரக்க மனம் கொண்ட பொதுமக்கள் உடனடியாக நிதியுதவி அளித்ததில், வெறும் 24 மணி நேரத்திற்குள் ரூ.1.58 லட்சத்திற்கும் அதிகமாகப் பணம் திரண்டது. இலக்கை விட அதிக நிதி கிடைத்ததாகக் கூறி, அந்தச் சிறுவன் தன் பதிவையும் பணப் பரிவர்த்தனை எண்களையும் எக்ஸ் பக்கத்திலிருந்து நீக்கினார்.

ஆனால், நிதி திரண்ட சில மணி நேரங்களிலேயே இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. சம்பந்தப்பட்ட டெல்லி ‘ஷ்ராஃப் கண் மையம்’ தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எங்களது லெட்டர் பேட் மற்றும் முத்திரையைப் பயன்படுத்தி போலியான மருத்துவ ஆவணங்கள் மூலம் சிலர் பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்; பொதுமக்கள் இத்தகைய போலி கோரிக்கைகளை நம்பவேண்டாம்” என அவசர எச்சரிக்கை விடுத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இணையவாசிகள் கேள்வி எழுப்பியபோது, எக்ஸ் ஸ்பேஸஸ் நேரலையில் வந்த ஜெய்சிங் ரத்தோட் முன்னுக்குப் பின் முரண்பாடாகப் பேசி, இறுதியில் போலி ஆவணங்கள் மூலம் நிதி திரட்டியதை ஒப்புக் கொண்டார். தன் தந்தையின் உடல்நலக்குறைவு மற்றும் குடும்ப நிதி நெருக்கடியால் தான் இவ்வாறு செய்ததாக அவர் சாதித்தாலும், ஏமாற்றமடைந்த மக்கள் தங்களது பணத்தைத் திரும்பக் கேட்டுப் போராடி வருகின்றனர்.
ஆபத்தான சூழலில் சக மனிதனுக்கு உதவ வேண்டும் என்ற நல்நோக்கத்தில் உடனடியாக ஒன்றிணைந்த இணையவாசிகள், இந்த உண்மை அம்பலமானதால் கடும் ஏமாற்றமும் கோபமும் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிலர் தாங்கள் அனுப்பிய பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கான சில ஸ்கிரீன்ஷாட்களும் இணையத்தில் பரவி வருகின்றன. மனிதநேயத்தின் அடிப்படையில் செய்யப்படும் இதுபோன்ற உதவி கோரிக்கைகளில் நடக்கும் மோசடிகள், எதிர்காலத்தில் உண்மையிலேயே உயிருக்குப் போராடும் எளிய மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உதவிகளையும் தடுத்துவிடும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கவலை தெரிவித்துள்ளனர்.
