“ஒரே ஒரு சிக்னல் போதும், உலகம் இருண்டு போகும்” ஈரானின் பகீர் எச்சரிக்கையால் பின்வாங்கும் அமெரிக்கா..? மத்திய கிழக்கில் அடுத்தடுத்து அரங்கேறும் பகீர் திருப்பங்கள்..!!

By Soundarya on சித்திரை 15, 2026

Spread the love

ஈரான் மீதான அமெரிக்காவின் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முற்றுகை நடவடிக்கையை கைவிடுமாறு சவுதி அரேபியா அமெரிக்காவை வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான இந்த முற்றுகை நடவடிக்கை, மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும், இது பேச்சுவார்த்தைக்கான சூழலைச் சிதைக்கும் என்றும் சவுதி அரேபியா கவலை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புமாறு அமெரிக்காவை சவுதி அழுத்தம் கொடுத்து வருவதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ அறிக்கை குறிப்பிடுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்ட நிலையில், சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பாலைவனப் பகுதி வழியாக செங்கடல் (Red Sea) துறைமுகங்களுக்குக் கொண்டு சென்று அங்கிருந்து அனுப்பி வருகிறது. தற்போது அமெரிக்கா ஈரானியத் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளதால், அதற்குப் பதிலடியாக ஈரான் தனது ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் மூலம் செங்கடலின் முக்கியப் பகுதியான ‘பாப் அல்-மந்தேப்’ (Bab al-Mandeb) ஜலசந்தியையும் முடக்கக்கூடும் என சவுதி அஞ்சுகிறது. அப்படி நடந்தால் சவுதியின் எஞ்சிய எண்ணெய் ஏற்றுமதியும் முற்றிலுமாக முடங்கும் அபாயம் உள்ளது.

   

இந்த முற்றுகை காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் ஆலோசகர் அலி அக்பர் வேலாயதி, அமெரிக்கா தனது “முட்டாள்தனமான தவறுகளை” மீண்டும் செய்தால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் ஒரே ஒரு சமிக்ஞை மூலம் சீர்குலைக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். ஈரானுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக இருந்த சுமூகமான உறவு இந்தப் போரினால் சிதைந்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றே இதற்குத் தீர்வாகும் என வளைகுடா நாடுகள் கருதுகின்றன.