“காங்கிரஸுக்கு திரும்பிய பக்கமெல்லாம் அடி”….. சத்தியமூர்த்தி பவன் இனி ‘விஜய் பவன்’?…. வெளுத்து வாங்கிய திமுக… தவெகவின் திடீர் ஸ்கெட்ச்….!

By Nanthini on ஆவணி 31, 2026

Spread the love

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியதைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த அரசியல் சலசலப்பில், காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை “விஜய் பவன்” என மாற்றிக்கொள்ளலாம் என்று திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் விமர்சித்துள்ளார். தவெக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் நேரு, அம்பேத்கர் மற்றும் பெரியாரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், பாஜகவின் நிழல் ஆட்சியை நடத்தும் தவெகவுடன் காங்கிரஸ் கைகோர்ப்பதாகக் காட்டமாகக் குற்றம் சாட்டினார்.

திமுகவின் இந்த திடீர் தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத காங்கிரஸ் தலைவர்கள், உடனடிப் பதிலடி கொடுத்து களமிறங்கியுள்ளனர். தமிழக காங்கிரஸின் பொருளாளர் ரூபி மனோகரன், திமுக ஆட்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்புகளில் அம்பேத்கர் பெயர் இடம்பெறாததைச் சுட்டிக்காட்டிப் பதிலடி கொடுத்தார். தேர்தல் தோல்வி பயத்தாலேயே திமுகவினர் நேருவையும் அம்பேத்கரையும் தற்போது கையில் எடுப்பதாகச் சாடிய அவர், சத்தியமூர்த்தி பவன் பெயரை மாற்றச் சொல்ல திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும், அறிவாலயத்தின் பெயரை என்னவென்று மாற்றப்போகிறீர்கள் என்றும் கேள்விகளை எழுப்பினார்.

   

மறுபுறம், திமுகவுடனான மோதல் ஒருபுறமிருக்க, தனக்கு ஆதரவளித்த தமிழக வெற்றிக் கழகத்துடனும் (தவெக) காங்கிரஸ் முரண்பட்டு நிற்கிறது. தவெகவினர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதை ஏற்றுக்கொள்ள முடியாத காங்கிரஸ் தலைவர்கள், அவர்கள் இன்னும் ‘ரசிகர் மனநிலையிலேயே’ இருக்கிறார்கள் என்று சாடினர். மேலும், நாடாளுமன்றத்தில் ஒரு எம்பி கூட இல்லாத ஒரு கட்சியை ‘இந்தியா’ கூட்டணியில் சேர்க்க முடியாது என்றும் காங்கிரஸ் வெளிப்படையாக விமர்சித்து, தவெகவின் அரசியல் கனவுகளுக்கு முட்டுக்கட்டை போட்டது.

   

இதன் விளைவாக, காங்கிரஸ் கணக்கிட்ட அரசியல் உத்திகள் அனைத்தும் தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளன. கேரளாவில் விஜய்க்கு இருக்கும் பெருவாரியான ரசிகர் பட்டாளத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் வாக்குகளை உயர்த்தலாம் என கதர் தலைவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், தவெக அங்கு தனியாகக் களமிறங்கி கட்சியை வளர்க்கத் தீவிரமகா இறங்கியுள்ளது. திமுக கூட்டணியை இழந்ததுடன், தவெகவுடனும் சுமுக உறவைப் பேண முடியாமல், காங்கிரஸ் கட்சி தற்போது அனைத்துப் பக்கங்களிலிருந்தும் கடும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.