நான் ஹீரோவா நடிக்குறத கைவிட்டதுக்கு ஒரே காரணம் அதுதான்… ஓப்பனாக சொன்ன சத்யராஜ்…!

By vinoth on புரட்டாதி 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து ‘எஸ் பாஸ்’ சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.

   

2005 வரை ஹீரோவாக நடித்து வந்த சத்யராஜுக்கு அப்போது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனால் அவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்தார். சத்யராஜ் கதாநாயகனாக நடித்த கடைசி கால படங்களில் ஒன்று அடிதடி. அந்த படத்தில் தன்னுடைய நிஜ வழுக்கை தலையோடு 50 வயது ரௌடி வேடத்தில் நடித்திருப்பார்.

   

இப்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பிஸியாக நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் ஏன் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கவில்லை என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அதில் “பச்சையாக சொல்ல வேண்டும் என்றால் நான் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. எனக்கு ஹீரோவாக மார்க்கெட் போயிடுச்சு. நான் ஹீரோவாக நடித்த படங்களும் சரியாக ஓடவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் சம்பளம் ஒழுங்காகக் கொடுக்கவில்லை.

 

கொடுத்த சம்பளத்தையும் திருப்பி வாங்கிக் கொண்டார்கள். அந்த நேரத்தில் ஹீரோவாக நடித்தால் கிடைக்கும் சம்பளத்தை விட குணச்சித்திர வேடத்தில் நடிக்க அதிக சம்பளம் தரத் தயாராக இருந்தார்கள். அதனால் அதை ஏற்றுக்கொண்டு நடிக்க ஆரம்பித்தேன். மற்றபடி நான் ஹீரோவாக நடித்து போரடித்து இப்படி ஆனேன் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.