நடிகர் சத்யராஜ், நடிகர் விஜயகாந்துக்கு பிடித்தமான நண்பர்களில் ஒருவர். இருவரும் சமகாலத்து நடிகர்களாக இருந்தாலும் விஜயகாந்த், ஒரு போதும் சத்யராஜை ஒரு போட்டியாளராக கருதியதே இல்லை. யாரையுமே தனக்கு எதிரியாக, போட்டியாக கருதாத நல்ல குணம் கொண்டவர்தான் கேப்டன் விஜயகாந்த்.
ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது, நான் வந்து வள்ளல் என்று ஒரு படம் நடிச்சேன். கடன் தொல்லையால் அந்த படம் வெளியே வர முடியாத ஒரு சிக்கல் ஏற்பட்டது. சக போட்டியாளன். சம காலத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். இந்த படம் இப்படி ஒரு சிக்கலில் மாட்டி விட்டது. அப்போது செல்போன் இல்லாத ஒரு காலகட்டம்.
நான் படப்பிடிப்பு இல்லை என்றால், சாவகாசமாக ஏழரை எட்டு மணிக்கு தான் காலையில் எழுந்திருப்பேன். காலையில் எனக்கு 6 மணிக்கு லேண்ட்லைனில் போன் வந்தது. யார் என்று கேட்டால், விஜயகாந்த் பேசுகிறார் என்றனர். காலையில் 6 மணிக்கு இவர் எதுக்கு போன் செய்கிறார் என்று யோசித்தபடி போனில் அவருடன் பேசினேன். அப்போது, சத்யராஜ் வள்ளல் படத்தில் ஏதாவது பிரச்னையா என்று கேட்டார். அது இருக்குதுங்க, அதை எப்படியாவது சமாளிச்சுக்கலாம்ங்க என்று சொன்னேன்.
இல்ல இல்ல நான் கிளம்பி வீட்டுக்கு வர்றேன். உங்களோட லேப்புக்கு வர்றேன், என்ன பிரச்னைன்னு சொல்லுங்க. அதை தீர்த்துவிடுவோம் என்று சொன்னார். அய்யய்யோ அதை எப்படியாவது சமாளிச்சிக்கலாம். நீங்க விட்ருங்க விஜி என்றேன். இல்லே இல்லே நான் கிளம்பிட்டேன் என்றார்.அவரை தடுத்து நிறுத்துவதற்குள் பெரிய பிரச்னையாக போய்விட்டது.
அப்போதான் நான் நினைச்சேன். டைட்டிலை மாத்தி வெச்சுட்டோம். வள்ளல் அப்படீங்கற டைட்டில் அவர் படத்துக்கு வெச்சிருக்கணும் என்று விஜயகாந்தின் தானாக முன்வந்து சக நடிகர்களுக்கு உதவும் குணம் குறித்து பெருமிதமாக பேசியிருக்கிறார் சத்யராஜ். விஜயகாந்த் இறப்பதற்கு முன், பலமுறை அவரை வீட்டுக்குச் சென்று நேரில் பார்த்து நலம் விசாரித்தவர் நடிகர் சத்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.