முதல் மரியாதை படத்தில் சத்யராஜ் எத்தனை நாள் நடித்தார் தெரியுமா?… இதனால்தான் பாரதிராஜா ஒரு மாஸ்டர்!

By vinoth on ஆடி 31, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். ஆனால் தான் இயக்கிய முதல் மரியாதை படத்துக்கு அந்த பாத்திரத்தை உணர்ந்து நடிக்க வேண்டிய ஒரு நடிகர் தேவை என்பதால் சிவாஜி கணேசனை தேடிச் சென்றார்.

   

அந்த படத்தில் இருந்த வயதான ஆணுக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் இடையிலான அன்பை களங்கமில்லாமல் சொல்லியிருந்தார். அந்த படத்தில் மலைச்சாமி என்ற கதாபாத்திரத்துக்கு தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் உயிர் கொடுத்திருந்தார் சிவாஜி கணேசன். அதுவரை சிவாஜியின் நடிப்பை ஓவர் ஆக்டிங் என சொன்னவர்களுக்கு பதிலளிப்பது போல இருந்தது அந்த படத்தில் சிவாஜியின் நடிப்பு.

   

அந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் வடிவுக்கரசியை வல்லுறவு செய்துவிட்டு ஓடிவிடும் நபர் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்தால் நன்றாக இருக்கும் என பாரதிராஜா விரும்பியுள்ளார். ஆனால் அப்போது சத்யராஜ் பயங்கர பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் முதல் மரியாதை படத்தின் ஷூட்டிங்கோ கர்நாடகாவில் நடந்து வந்துள்ளது.

 

இதையடுத்து பாரதிராஜா ஒரு முடிவை எடுத்துள்ளார். சென்னையில் அப்போது மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை ஷூட்டிங் நடக்காது. அதனால் அந்த நாளில் அவரை பெங்களூருவுக்கு விமானத்தில் வரவழைத்து அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை எடுத்து அன்றிரவே விமானத்தில் திருப்பி அனுப்பிவிடலாம் என முடிவு செய்துள்ளனர்.

அதன்படி காலையில் பெங்களூர் வந்த சத்யராஜ் அங்கிருந்து லொகேஷனுக்கு சென்று தான் சம்மந்தப்பட்ட காட்சிகளை எல்லாம் மாலைக்குள்ளாகவே நடித்துவிட்டு சென்னைக் கிளம்பிவிட்டாராம். இப்படி முதல் மரியாதை படத்தில் அவர் நடித்ததே ஒரே ஒருநாள் மட்டும்தானாம். அந்தளவுக்கு திட்டமிட்டு பாரதிராஜா அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்ததாக அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.