50 கோடி ரூபாய் விமர்சனம்… சரிந்த வாக்குகள்… தாராபுரத்தில் சத்யபாமாவின் இமாலய வெற்றியா அல்லது அதிர்ஷ்டமா?… தவெகவின் பரபரப்பான வெற்றிக்குப் பின்னால் உள்ள ரகசியம்…..!

By Nanthini on ஐப்பசி 9, 2026

Spread the love

தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகக் களமிறங்கிய பி. சத்யபாமா, கடுமையான போட்டிக்கு இடையே 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், பின்னர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில், தவெக தலைவர் விஜயின் தீவிர பிரச்சாரத்தின் ஆதரவோடு அவர் மீண்டும் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளார்.

   

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் கே. பானுமதி முன்னிலை வகித்த நிலையில், 5வது சுற்றுக்குப் பிறகு சத்யபாமா தனது வெற்றியை உறுதிப்படுத்தத் தொடங்கினார். இறுதியில், தவெக வேட்பாளர் சத்யபாமா 66,841 வாக்குகளையும், திமுக வேட்பாளர் எஸ். சுகன்யா 57,370 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகளையும் பெற்றனர். இத்தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 80.30 சதவீதம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

   

ஆனாலும், கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டபோது 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சத்யபாமா, தற்போது ஆளுங்கட்சியான தவெகவின் சார்பில் போட்டியிட்டு அந்த வித்தியாசத்தை 9,471 ஆகக் குறைத்துள்ளார். மேலும், கடந்த முறை அவர் பெற்ற 81,100 வாக்குகளுடன் ஒப்பிடும்போது, தவெக சார்பில் இந்த முறை அவருக்குக் கிடைத்த வாக்குகள் கணிசமாகச் சரிந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த சத்யபாமா மீது பல்வேறு தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், இத்தொகுதியில் தவெக தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவு ஆளுங்கட்சியான தவெகவுக்கு ஒருபுறம் உற்சாகத்தைத் தந்தாலும், கடந்த தேர்தலை விட வாக்குகள் குறைந்துள்ளது குறித்து அக்கட்சியினர் தீவிரமாக ஆராய வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.