தமிழகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாகப் பணி நிரந்தரம் செய்வதாக திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்று நீண்ட காலமான போதிலும், இந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாதது ஊழியர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், தங்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கூடுதல் பணிச்சுமை மற்றும் விலைவாசி உயர்வு போன்ற சூழல்களில், குறைந்த தொகுப்பூதியத்தில் பணிபுரிவது மிகுந்த சிரமத்தை அளிப்பதாக ஊழியர் சங்கங்கள் கவலை தெரிவிக்கின்றன.
தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். காலமுறை ஊதியம், பணிக்கொடை உள்ளிட்ட திமுகவின் வாக்குறுதி 313-ஐ நிறைவேற்றக் கோரி இந்த போராட்டம் நடைபெறவுள்ளது. தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை இயக்குநருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
