1999 ஆம் ஆண்டு வெளியான சேது திரைப்படம் தமிழ் சினிமாவுக்குப் பல கலைஞர்களை கொடுத்தது. அந்த படத்தின் வெற்றியால்தான் பாலா, அமீர், சசிகுமார் மற்றும் விக்ரம் ஆகியோர் தமிழ் சினிமா உலகுக்குக் கிடைத்தனர். அந்த படத்தில் பாலாவுக்கு உதவி இயக்குனராக இருந்த அமீர் அடுத்த சில ஆண்டுகளில் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அந்த படம் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றி இல்லை என்றாலும், விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றது. சூர்யாவுக்கு ஒரு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. அதன் பிறகு இயக்குனர் அமீர் இயக்கிய திரைப்படம்தான் ராம். இந்த திரைப்படத்தில் ஜீவா கதாநாயகனாக ஒரு சிறப்புக் குழந்தை இளைஞனாக நடித்திருப்பார்.
ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஜீவா இல்லையாம். கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்தானாம். அப்போது இயக்குனர் அமீர் வைத்திருந்த கதையின் படி கதை இலங்கையில் நடப்பதாகவும், படத்தின் பெயர் திலீபன் என்றும் வைக்கப்பட்டுள்ளது. கதைப்படி கதாநாயகனுக்கு வயது 14 தானாம்.
அப்போது அமீர் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கைதான் நடிக்கவைக்கவேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இது சம்மந்தமாக அவர் கார்த்திக்கின் மனைவியை சந்தித்துக் கதை சொல்லியுள்ளார். ஆனால் அப்போது கௌதம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் அவர் வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.
பின்னர்தான் கதையில் சில மாற்றங்களை செய்து 17 வயது இளைஞன் என மாற்றி அதன் பின்னர் ஜீவாவைக் கதாநாயகனாக்கி படத்தை எடுத்துள்ளார்.இதை அந்த கதை உருவாக்கத்தில் இருந்து படமாகுவது வரை கூட இருந்த அந்த படத்தின் உதவி இயக்குனரும் தற்போதைய நடிகருமான சசிகுமார் கூறியுள்ளார்.