“நான் இருக்கேன்றதையே மறந்துட்டீங்களா?”… ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த சசிகலா…. பரபரப்பு பேட்டி….!

By Nanthini on தை 17, 2026

Spread the love

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா, செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். “கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தங்களுக்கு எதிரிகளே இல்லை” என்று திமுக நினைத்துக்கொண்டிருப்பதாகவும், ஆனால் நான் ஒருத்தி களத்தில் இருப்பதை அவர்கள் முற்றிலுமாக மறந்துவிட்டுப் பேசுகிறார்கள் என்றும் அவர் சாடினார். மக்கள் நலனில் அக்கறை காட்டாமல், தமிழ் மற்றும் திராவிடம் என்ற பெயரில் எத்தனை காலத்திற்கு மக்களை ஏமாற்ற முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், தேர்தல் நெருங்குவதால் மட்டுமே பொங்கல் பரிசுத் தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை திமுக அரசு வெளியிடுவதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், “உங்கள் கனவுகளைச் சொல்லுங்கள்” என்ற புதிய திட்டத்தின் பின்னணியில் ஒரு சூட்சுமம் இருப்பதாகவும், தனியார் நிறுவனத்தின் உதவியுடன் மக்களின் மனநிலையை அறிந்து தேர்தலுக்காகத் திட்டமிடவே திமுக முயல்வதாகவும் அவர் தெரிவித்தார். எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய மக்களுக்காகக் கொண்டு வரப்பட்ட சத்துணவு மற்றும் இலவச மின்சாரம் போன்ற திட்டங்களை நினைவு கூர்ந்த சசிகலா, தற்போது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசு, மக்களின் உண்மையான உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் செயல்படுவதாகத் தனது பேட்டியில் பரபரப்பாகத் தெரிவித்தார்.