தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா அரசியலில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவர் அண்மையில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த 2017-ஆம் ஆண்டு சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக இருந்தபோது கட்சியில் பொறுப்பு வகித்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த தேர்தலில் சசிகலா குறிப்பாக தென் மாவட்டங்களைக் குறிவைத்துத் தனது அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார். குறிப்பாக முக்குலத்தோர் சமூக மக்களின் வாக்குகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு பலமான தாக்கத்தை ஏற்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இருப்பினும், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி சசிகலா தேர்தலில் போட்டியிடுவதில் ஒரு சட்டச் சிக்கல் நிலவுகிறது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றதால், அவர் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடை 2027-ஆம் ஆண்டு வரை நீடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சட்டத் தடையைத் தாண்டி அவர் நேரடியாகக் களமிறங்குவாரா அல்லது தனது ஆதரவாளர்களை முன்னிறுத்தி அரசியலில் காய் நகர்த்துவாரா என்பது வரும் நாட்களில் உறுதியாகும்.
