பாஜக நிர்வாகியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முன்னாள் தலைவருமான நடிகர் சரத்குமார், பாஜகவில் தனக்கான அரசியல் அங்கீகாரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசியுள்ளார். சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்கும் எண்ணம் எதுவுமில்லை என்று தெளிவுபடுத்திய அவர், கட்சி தலைமை தனக்கான வாய்ப்புகளை விரைந்து வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் பொறுமையுடன் காத்திருப்பதாகக் கூறினார்.
பாஜகவில் இணைந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், கட்சிப் பொறுப்புகள் கிடைப்பது குறித்துப் பேசிய சரத்குமார், “எனக்கு பொறுப்பு இருக்கிறதோ இல்லையோ, என்னுடன் பயணித்த தோழர்களுக்குப் பொறுப்புகளை வாங்கித் கொடுத்துள்ளேன். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பார்கள்; ஆனால் நான் எந்த பூமியை ஆளப்போகிறேன் என்று எனக்கே தெரியாது” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், தனது அறிவு, ஆற்றல் மற்றும் உழைப்பு கட்சித் தலைமைக்கு நன்கு தெரியும் என்றும், அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அதிமுகவுடனான முந்தைய கூட்டணி அனுபவங்கள் மற்றும் 1996 ஆம் ஆண்டு அரசியல் நிகழ்வுகள் குறித்து நினைவு கூர்ந்த அவர், அன்றைய காலகட்டத்திலேயே தான் தனிக்கட்சி தொடங்கியிருந்தால் கணிசமான தொகுதிகளை வென்றிருக்க முடியும் என்றார். அதேவேளையில், அன்றைய சூழலில் தனக்கு எதிராகப் பிரசாரம் செய்திருந்த போதிலும், தனது திறமையை உணர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா பின்னர் இரண்டு தொகுதிகளை வழங்கி கௌரவித்ததை சுட்டிக்காட்டி, தனது அரசியல் மதிப்பை விவரித்தார்.
தவெக மற்றும் அண்ணாமலையின் புதிய இயக்கம் சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், மக்கள் சேவை செய்வதே தனது முதன்மை நோக்கம் என்றும், வாய்ப்புகள் தாமதமானாலும் மக்களுக்கான நற்பணிகள் தொடரும் என்றும் தெரிவித்தார். எது எப்போது நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்று குறிப்பிட்ட சரத்குமார், கட்சித் தலைமை தனக்கு உரிய பொறுப்பை அளிக்கும் பட்சத்தில் தீவிர அரசியலில் இறங்கிப் பணியாற்றக் காத்திருப்பதாகத் தெரிவித்து பேட்டியை நிறைவு செய்தார்.
