சிவகங்கை நகராட்சியின் 21-வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினரான அயுப் கான், தனது வார்டு பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) தேர்தல் சின்னமாக ‘விசில்’ ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் காரணங்களுக்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்க வரும்போது விசில் ஊதுவதற்குப் பதிலாக, இனி ஒலிபெருக்கி (Loudspeaker) மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு தூய்மைப் பணியாளரிடமிருந்து விசிலைப் பெற்று, அதை அவர் குப்பை சேகரிக்கும் வண்டியிலேயே போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
