பிரபல நடிகரான சமுத்திரக்கனி இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவியாளராக வேலை பார்த்துள்ளார். முதன்முதலாக கடந்த 2003-ஆம் ஆண்டு ரிலீசான உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலமாக இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வேலை பார்த்துள்ளார். நெறஞ்ச மனசு, நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். பருத்திவீரன் சுப்பிரமணியபுரம், சாட்டை, நீர்ப்பறவை, வேலையில்லா பட்டதாரி, ரஜினி முருகன், அப்பா உள்ளிட்ட படங்களில் சமுத்திரக்கனியின் நடிப்பு ரசிகர்களை கவரும் விதமாக அமைந்தது. கடந்த 2008-ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கி நடித்த சுப்பிரமணியபுரம் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது.
இந்த நிலையில் சசிகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் ராம் படம் பண்ணும் போது அமீர் அண்ணனை பாக்குறதுக்காக சமுத்திரக்கனி வருவாரு. எனக்கு சுப்பிரமணியபுரம் படத்துல 80 ஸ் கதாபாத்திரத்தில் சமுத்திரகனி நடிக்கணும்னு ஒரு யோசனை வந்துச்சு. உடனே அவருக்கு போன் பண்ணி அண்ணே ஒரு படம் பண்ணனும் நீங்க முடி வளர்க்கணும் அப்படின்னு சொன்னேன். அவரும் சரின்னு சொல்லிட்டாரு. கதை என்ன? கேரக்டர் என்ன அப்படின்னு எதுவுமே என்கிட்ட கேட்கல.
அப்படியே நானும் அடுத்தடுத்த வேலைய பாத்துட்டு இருந்தேன். ஒரு வருஷம் கடந்திருச்சு. திடீர்னு ஒரு நாள் அண்ணன் எனக்கு போன் பண்ணி, வீட்டில ஏன் இவ்வளவு முடி வளர்த்துட்டு திரியுறன்னு திட்டுறாங்க சொன்னாரு. அப்பதான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. உடனே அவரை கூப்பிட்டு ஆபீஸ்ல வச்சி டிரஸ் எல்லாம் அளவெடுத்தும் இவர்தான் அந்த கேரக்டரில் நடிக்கணும்னு உறுதிப்படுத்திட்டோம் என கூறியுள்ளார்.