பிரபல நடிகரான சமுத்திரக்கனி இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவியாளராக வேலை பார்த்துள்ளார். முதன்முதலாக கடந்த 2003-ஆம் ஆண்டு ரிலீசான உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலமாக இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வேலை பார்த்துள்ளார். நெறஞ்ச மனசு, நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். பருத்திவீரன் சுப்பிரமணியபுரம், சாட்டை, நீர்ப்பறவை, வேலையில்லா பட்டதாரி, ரஜினி முருகன், அப்பா உள்ளிட்ட படங்களில் சமுத்திரக்கனியின் நடிப்பு ரசிகர்களை கவரும் விதமாக அமைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சமுத்திரகனியும் நடித்துள்ளார். இந்தியன் 2 படத்தில் நடித்தது குறித்து சமுத்திரகனி கூறியதாவது, கமல்ஹாசன் சாருக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.
நான் ஆப்ரேட்டராக இருந்தபோது வாழ்வே மாயம் படத்தை தான் அதிகம் முறை ஓட்டியிருக்கிறேன். ஹேராம், அன்பே சிவம் படங்கள் மிகவும் பிடிக்கும். இந்தியன் படத்தில் ஒரு சைடு ஆர்ட்டிஸ்ட்டாகவாது நடிக்க விரும்பி சென்றேன். ஆனால் என்னால் அடிக்க முடியவில்லை. இதை மனதில் வைத்து எனக்காகவே இந்தியன் 2 வில் எனது கதாபாத்திரத்தை சங்கர் சார் எழுதியதாக கேள்விப்பட்டேன். கமல் சாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும். எனக்கும் அந்த ஆசை இருந்தது.
கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நாவலை கமலஹாசன் சாரை வைத்து இயக்க வேண்டும் என நினைத்தேன். அந்த நாவலில் மொக்கை நாயக்கர் என்ற கதாபாத்திரம் வரும். அந்த கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் சாரை நடிக்க வைக்க வேண்டும் என விரும்பினேன். அவரது ஆபீசுக்கு சென்று அந்த நாவல் புத்தகத்தை கொடுத்து விட்டு எனது ஆசையையும் கூறினேன். ஆனால் அவர் எந்த பதிலும் கூறவில்லை. இதனால் நானும் அதனை அப்படியே விட்டுவிட்டேன் என கூறியுள்ளார்.