Connect with us

HISTORY

இந்தியாவின் குறுக்கே உருவான புதர்வேலி, உப்புக்காக அக்கப்போர் செய்த ஆங்கிலேயர்களின் சுரண்டல் வரலாறு…

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் உப்பு நமக்கு மிகவும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. நாம் ஒரு மளிகை கடைக்குச் சென்று காசு கொடுத்தால் மிக எளிதாக நமக்கு உப்பு கிடைத்துவிடும். ஆனால் 150 வருடங்களுக்கு முன்பு உப்பு வாங்கமுடியாமல் உடலில் உப்புச்சத்து குறைந்து பல குறைபாடுகளுக்கு உள்ளாகி பல லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற வரலாறு அதிர்ச்சியூட்டுகிறது. அனைத்துக்கும் காரணம் ஆங்கிலேயர்களின் சுரண்டல் புத்தியே…

இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார் 19 ஆம் நூற்றாண்டில் பல சுரண்டல்களில் ஈடுபட்டபோது அவர்களின் கண்களுக்கு உப்பும் தப்பவில்லை. உப்பின் மீது அதிகளவு வரி வசூலிக்கப்பட்டது. இதனால் உப்பின் விலை ஒரு கிலோ 3 ரூபாய் என்று உயர்ந்தது. 3 ரூபாய்தானே என்று நாம் நினைக்கலாம். ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் ஒரு எளிய குடும்பத்தின் சராசரி ஆண்டு வருமானமே 1 ரூபாய்தான். அப்படி என்றால் உப்பு அவர்களுக்கு ஒரு எட்டாக்கனியாகவே இருந்திருக்கிறது.

   

இந்தியாவில் அந்த சமயத்தில் உடல் உழைப்பை நம்பிதான் பல குடும்பங்கள் இருந்தன. அதிகளவு உழைத்தால்தான் ஓரளவு கூலி கிடைக்கும். அதிகளவு உழைப்பதால் அவர்களின் உடலில் இருந்து வியர்வை வழியாக உப்பு வெளியேறும். ஆதலால் உப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது, இப்போதும் இருக்கிறது.

இவ்வாறு எளிய மக்களுக்கும் சரி பணக்காரர்களுக்கும் சரி, மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமாக இருக்கும் உப்புக்கு அதிக வரியை போட்டார்கள் ஆங்கிலேயர்கள். அப்போதிருந்த நில உடைமையாளர்கள் கூட உப்பு வாங்க திணறினார்கள் என்றால் எளிய மக்களின் நிலையை நாம் நினைத்துப்பார்க்க வேண்டும்.

உப்பின் விலை பன்மடங்கு அதிகமானதால் உப்புக்கடத்தலும் ஆங்காங்கே அதிகமானது. ஏனென்றால் உப்பை திருடுவதை தவிர வேறு வழி இல்லை. அந்த திருட்டை தடுப்பதற்காகவே ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய வேலிதான் புதர்வேலி.

சீனப் பெருஞ்சுவரை அதிசயம் என்கிறோமே, அதற்கு இணையான புதர்வேலியை இந்தியாவின் குறுக்கே உருவாக்கினார்கள் பிரிட்டிஷார். சிந்து பகுதியில் இருந்து ஒடிசா வரை அந்த புதர் வேலி இந்திய நிலப்பரப்பின் குறுக்கே 2300 மைல்கள் நீண்டது. சப்பாத்திக்கள்ளி, முள்மரங்கள் போன்றவைகளை விதைத்து அதனை வளர்த்து உப்பு திருடுவதை தடுக்க வேலிபோல் அதனை பாதுகாத்தனர். கிட்டத்தட்ட 8 அடிக்கும் மேல் வளர்ந்த அந்த புதர்வேலியை எந்த மனிதராலும் கடந்துபோக முடியாது. அந்தளவுக்கு அடர்த்தியான வேலியாக அது வளர்ந்து நின்றது.

உப்புக்கு சுங்கம் அமைத்து வசூல் செய்யப்பட்டது. முதலில் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்பட்ட புதர்வேலி அதன் பின் இந்தியாவின் குறுக்கே 2300 மைகள் நீண்டது. உப்பு கடத்துவதை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட வேலி என்பதால் உப்புவேலி என்று இதனை வரலாற்றாசிரியர்கள் அழைக்கிறார்கள்.

இந்த உப்புவேலி 1850-ல் இருந்து 1880 வரை வளர்க்கப்பட்டு ஆங்கிலேயர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு இருக்கிறது. அதன் பின் காலப்போக்கில் இந்த வேலி அழிந்துப்போயிருக்கிறது அல்லது அழிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் இதற்கான நேரடிச்சான்று ஆங்காங்கேதான் கிடைக்கிறது. இது குறித்து ராய் மாக்ஸம் என்ற பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர் இந்திய நிலப்பரப்பில் அலைந்து திரிந்து மிகத் தீவிரமாக இதன் எச்சங்களை தேடி கண்டுபிடித்து இருக்கிறார். இது குறித்து அவர் எழுதிய புத்தகம்தான் “The Great Hedge of India” என்ற புத்தகம். இப்புத்தகம் தமிழில் “உப்புவேலி” என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரகம் எவ்வளவு முக்கியமான ஒரு போராட்டம் என்று இந்த உப்புவேலி வரலாற்றை படிப்பவர்கள் நிச்சயம் உணருவார்கள்.

 

Continue Reading

More in HISTORY

To Top