சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஆர்.கே.நகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (Government ITI) 2026-ஆம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் வரும் 03.06.2026 வரை இணையதளம் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இங்கு 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், வயர்மேன் உள்ளிட்ட பல்வேறு உலகத்தரம் வாய்ந்த தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஐடிஐ-யில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் வசதிக்காகத் தமிழக அரசு பல்வேறு சலுகைகளை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. பயிற்சியில் சேரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 750/- வழங்கப்படும். இதுதவிர, அரசுப் பள்ளிகளில் படித்து இதில் சேரும் மாணவர்களுக்கு ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களின் கீழ் கூடுதலாக மாதம் ரூ. 1000/- வழங்கப்படுவதால், அவர்களுக்கு மொத்தம் ரூ. 1,750/- மாதாந்திர உதவித்தொகையாகக் கிடைக்கும். மேலும், விலையில்லா மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபட உபகரணங்கள் போன்றவையும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இங்குப் பயின்று முடிக்கும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் மூலம் 100% உடனடி வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும், தொழிற்பயிற்சியை முடித்த பிறகு நேரடியாகப் பட்டயப் படிப்பு போன்ற உயர்கல்வியைத் தொடரவும் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் ரூ. 50/- விண்ணப்பக் கட்டணம் செலுத்தி, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவோ அல்லது ஆர்.கே.நகர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரடியாகச் சென்றோ தேவையான சான்றிதழ்களுடன் வரும் ஜூன் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
