தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தை 25 சதவீதம் உயர்த்தி அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த புதிய அறிவிப்பின்படி, டாஸ்மாக் விற்பனையாளர்களின் மாதச் சம்பளம் ரூ 19,413 ஆகவும், டாஸ்மாக் மேற்பார்வையாளர்களின் சம்பளம் ரூ 22,313 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊதிய உயர்வு, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.
அமைச்சர் விக்னேஷ் இந்த சம்பள உயர்வு குறித்துப் பேசுகையில், ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன் நுகர்வோர் நலனையும் இது உறுதி செய்யும் என்று குறிப்பிட்டார். குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ 10 வசூலிக்கப்படுவதாக எழுந்து வரும் புகார்களுக்கு இந்த நடவடிக்கை முற்றுப்புள்ளி வைக்கும் என்றும், இனி பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பது முற்றிலும் தடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
