தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன. எம் ஜி ஆர் போலவே விஜயகாந்தும் திரையில் நடிக்கும் போது சில கொள்கைகளை கடைபிடித்தார்.
பெரும்பாலும் மது மற்றும் சிகரெட் குடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்துவிடுவார். அதுபோல பெண்கள் மற்றும் வயதானவர்களை அவமரியாதை செய்வது போலவோ அல்லது அடிப்பது போன்ற காட்சிகளிலோ நடிக்க மாட்டார். அந்தளவுக்கு இமேஜை மெய்ண்டெய்ன் செய்து வந்தார். விஜயகாந்த் கருப்பாக இருந்த காரணத்தால் அவரோடு ஜோடியாக நடிக்க முதலில் நடிகைகள் மறுத்தார்கள். ஆனால் அவர் தன் திறமையாலும் அர்ப்பணிப்பாலும் போராடி ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தைப் பெற்றார்.

S A chandrasekar and Vijayakanth
80 களில் விஜயகாந்துக்கு அதிக ஹிட் கொடுத்தவர்களில் விஜய்யின் தந்தை சந்திரசேகரும் ஒருவர். இருவரும் இணைந்து 27 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்கள். விஜயகாந்தை ஆக்ஷன் ஹீரோவாக்கியதில் SAC ன் பங்கும் முக்கியமானது. ஒரு கட்டத்தில் விஜய்யை நடிகராக அறிமுகமாக்கி SAC எடுத்த நாளைய தீர்ப்பு படுதோல்வி படமானது. அதனால் எப்படியாவது விஜய்யை மக்களிடம் கொண்டுசேர்க்கவேண்டுமென்று யோசனை செய்துள்ளார்.

Vijayakanth and Vijay
அதற்காக விஜய் நடிக்கும் படத்தில் விஜயகாந்த் இருந்தால் அவர் மூலமாக அதிக ரசிகர்களை விஜய் சென்று சேரமுடியும் என முயற்சி செய்துள்ளார். அப்படி உருவானதுதான் செந்தூரப் பாண்டி. அந்த படத்தில் நடிக்க விஜயகாந்திடம் கேட்டபோது உடனே சம்மதம் தெரிவித்தாராம். மேலும் அந்த படத்துக்காக சம்பளம் எவ்வளவு என்று கேட்ட போது “எனக்கு சம்பளம் எல்லாம் வேண்டாம். விஜய் தம்பி ஜெயிக்கணும். அதுக்காக நான் இந்த படம் பண்றேன்” என்றாராம். இதை ஒரு நேர்காணலில் விஜயகாந்தே பகிர்ந்துள்ளார். படம் ரிலிஸாகி ஹிட்டானதும் விஜயகாந்த் வீட்டுக்கு அருகே இருந்த தன்னுடைய நிலத்தை அவர் பெயருக்கு எழுதிக் கொடுத்தாராம்.
