நாகர்கோவிலில் 200 கிராம் குட்கா வைத்திருந்ததாகக் கூறி, சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளி வியாபாரியைக் காவல்துறையினர் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சிறையிலிருந்த சபரிவர்மன் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, உடற்கூறாய்வு (பிரேதப் பரிசோதனை) செய்யப்பட்டு, மர்ம மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தற்போது இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில் அவரது உடலின் தலை, இடது நெஞ்சுப் பகுதி, வலது கை மற்றும் இரு கால்கள் என மொத்தம் 19 இடங்களில் பலத்த காயங்கள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறையிலேயே அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளதால், நேசமணிநகர் காவல்துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, இந்த மர்ம மரணத்திற்குக் காரணமான நாகர்கோவில் சிறையின் தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார் மற்றும் திருவிடைநம்பி ஆகிய மூன்று சிறைக்காவலர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
