சசிகலா, ஓபிஎஸ் விவகாரத்தில் அடுத்த அதிரடி ட்விஸ்ட்…. எடப்பாடியாரை டென்ஷனாக்கிய எஸ்.பி. வேலுமணி…. உண்மையை உடைத்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி….!

By Nanthini on ஐப்பசி 18, 2026

Spread the love

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவையில் அளித்த பேட்டியில் ஓ.பி.எஸ்., சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதற்கு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இரட்டை இலைச் சின்னத்திற்கு எதிராகச் செயல்பட்டு திமுகவில் இணைந்து வெற்றிபெற்ற ஓ.பி.எஸ். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து பேசுவது ஏற்புடையதல்ல என்றும், அப்படிச் சொல்வது திமுக அமைச்சர்களைச் சேர்ப்பதற்குச் சமம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், டிடிவி தினகரன் ஏற்கனவே எடப்பாடியார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்று தேர்தல்களில் இணைந்து பணியாற்றி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சசிகலா அவர்கள் 2021-ல் பொதுவாழ்விலிருந்து விலகுவதாக அறிவித்ததோடு, 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து வேட்பாளர்களை நிறுத்திப் பிரச்சாரம் செய்தவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சூழலில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எஸ்.பி. வேலுமணி இதுபோன்ற குழப்பமான கருத்துக்களைத் தெரிவித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

   

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியை மலரச் செய்வோம் என்று உரிமைக் கொண்டாடும் வேலுமணி தரப்பினர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் உத்தரவை மீறி சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர்களில் வேலுமணியும் ஒருவர் என்பதை இந்த நேரத்தில் அவர் நினைவூட்டியுள்ளார்.

   

கட்சியிலிருந்து ஓ.பி.எஸ். மற்றும் சசிகலா ஆகியோரை நீக்கியதில் முக்கியப் பங்காற்றியவர்களே தற்போது அவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று மாறுபட்ட கருத்துக்களைக் கூறுவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. எந்தவொரு பொறுப்பற்ற அல்லது பொதுவான கருத்துக்களையும் எடப்பாடியார் தலைமையிலான கழகத்தின் ஒழுக்கத்தைக் குலைக்கும் வகையில் தெரிவிக்கக் கூடாது என்பதே தங்களது உறுதியான நிலைப்பாடு என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.