ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ள அதிநவீன எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பின் நான்காவது தொகுப்பு, நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு தற்போது இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் கடந்த 2018-ம் ஆண்டு கையெழுத்தானது. உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட தடங்கல்களால் இந்த நான்காவது தொகுப்பு வழங்கப்படுவதில் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்திய பாதுகாப்பு நிபுணர்கள் குழு ரஷ்யா சென்று ஆய்வு செய்ததை அடுத்து, இந்த வான் பாதுகாப்பு அமைப்பு மே மாதம் நடுப்பகுதியில் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தியாவிடம் உள்ள மூன்று எஸ்-400 அமைப்புகள் பஞ்சாப் செக்டார், மேற்கு வங்கத்தின் சிலிகுரி காரிடார் மற்றும் குஜராத்-ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. தற்போது புதிதாக வரும் நான்காவது அமைப்பு, ராஜஸ்தானின் எல்லைப் பகுதிகளில் குறிப்பாகப் பாகிஸ்தான் அச்சுறுத்தல்களைக் கையாளும் வகையில் நிறுவப்பட உள்ளது. 1070 கி.மீ தூரம் பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ராஜஸ்தான் செக்டாரில் இது இணைக்கப்படுவது, இந்தியாவின் வான் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும். பாகிஸ்தான் ஏவக்கூடிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வானிலேயே கண்டறிந்து அழிப்பதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கும்.
தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வலிமையான இந்த எஸ்-400 அமைப்பானது, சுமார் 600 கி.மீ தொலைவு வரையிலான வான்வழி அச்சுறுத்தல்களைத் துல்லியமாகக் கண்டறியும் திறன் கொண்டது. இதில் ஏவுதள வாகனங்கள், அதிநவீன ரேடார் அலகுகள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் என மொத்தம் 16 வாகனங்கள் ஒரு தொகுப்பாகச் செயல்படும். எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை 400 கி.மீ தொலைவிலேயே இடைமறித்துத் தாக்கும் வல்லமை படைத்தது இக்கருவி. இந்திய வான்படை வீரர்களுக்கு இந்த அமைப்பை இயக்குவதற்கான பயிற்சிகளை ரஷ்யா ஏற்கனவே வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய ஐந்தாவது மற்றும் கடைசி வான் பாதுகாப்பு அமைப்பு இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் இந்தியா வந்தடையும் என்று ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் உறுதி அளித்துள்ளார். மொத்தம் 10 ‘எஸ்-400’ பிரிவுகளும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவின் வான்வெளி பாதுகாப்பு ஒரு இரும்புக்கோட்டையாக மாறும். அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் எல்லை தாண்டிய வான்வழித் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதில் ரஷ்யாவின் இந்த எஸ்-400 தொழில்நுட்பம் இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது.
