மதுரையை பூர்வீகமாகக் கொண்ட 26 வயதான ஷேக் என்பவர், சென்னை முகப்பேர் பகுதியில் தங்கி பிளம்பர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு, வழக்கம் போல மது அருந்திவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் சாலையோரம் நடந்து சென்றபோது, அங்கு தனியாக இருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரைப் பார்த்துள்ளார். அந்தப் பெண்ணிடம் ஷேக் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாகத் தெரிகிறது.
ஷேக்கின் இந்த வக்கிரச் செயலுக்கு அந்தப் பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரிடமிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷேக், தற்காப்புக்காகப் போராடிய அந்தப் பெண்ணை அருகில் கிடந்த கற்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கொடூரமாகத் தாக்கியதில், அந்தப் பெண் வலியால் அலறித் துடித்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட ஷேக் அங்கிருந்து தப்பியோடினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜே.ஜே. நகர் காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அந்தப் பெண் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த ஷேக்கை தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்தனர்.
உயிரிழந்த பெண் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விவரங்களை போலீஸார் இன்னும் முழுமையாகக் கண்டறியவில்லை. போதையின் உச்சத்தில் ஒரு பெண்ணின் உயிரைப் பறித்த இந்த கொடூரச் சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள ஆதரவற்ற பெண்கள் இத்தகைய வன்முறைகளுக்கு எளிதில் இலக்காவது பாதுகாப்பற்ற சூழலை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
