புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுவதாகப் பரவிய வதந்திகளால் பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. மோஷி கிராமத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்திற்குள் நன்கொடை வசூலிப்பதற்காக நுழைந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அனுப் குமார் மற்றும் ராக்கி குமார் ஆகிய இருவரைக் கண்டு சந்தேகமடைந்த பெண் ஒருவர் காவலாளியிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
பேச மற்றும் கேட்கும் திறனற்ற அந்த இருவரையும் குழந்தை கடத்தல்காரர்கள் எனத் தவறாகக் கருதிய குடியிருப்புவாசிகள் மற்றும் காவலாளிகள் அவர்களைக் கயிற்றால் கட்டி வைத்துத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அப்பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் செயல்படுவதாக வதந்திகள் பரவின.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் முறைப்படி அனுமதி பெற்று நன்கொடை வசூலிக்க வந்தவர்கள் என்பதும், குழந்தை கடத்தலில் ஈடுபடவில்லை என்பதும் உறுதியானது. இதையடுத்து, தவறான புரிதலால் வதந்திகள் பரவியதாக விளக்கமளித்த காவல்துறையினர், அந்த இருவரையும் தாக்கிய காவலாளி மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
