“யார் கட்சி தொடங்கினாலும் கார்டு வாங்கிடுவாங்க”… அண்ணாமலை, தனுஷ் புதிய கட்சியில் கூட இணைவார்கள்…. சிடிஆர் நிர்மல்குமாரை கலாய்த்த ஆர்.எஸ். பாரதி….!

By Nanthini on ஆவணி 15, 2026

Spread the love

தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழல் பல்வேறு விவாதங்களையும் கருத்து மோதல்களையும் ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவுக்குப் பின், சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் ‘இந்தியா’ கூட்டணியின் பெரும்பாலான கட்சிகள் பங்கேற்காத நிலையில், திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதன் காரணமாக திமுக மற்றும் பாஜக இடையே மறைமுகமான அல்லது நேரடியான கூட்டணி நெருக்கம் உருவாகி வருகிறதோ என்ற சந்தேகத்தைக் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் எழுப்பத் தொடங்கியுள்ளன.

   

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சி.டி.ஆர். நிர்மல்குமார், திமுகவும் பாஜகவும் ஏற்கனவே மறைமுகக் கூட்டணியில் இருந்ததாகவும், தற்போது அது நேரடி கூட்டணியாக மாறியுள்ளதாகவும் விமர்சித்தார். மேலும், நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை என்ற ரீதியில் இரு தரப்பினரும் பேசி வருவதால் 2001-ஆம் ஆண்டு நிலவிய அரசியல் சூழல் மீண்டும் உருவாகி வருவதாக அவர் சாடினார். அத்துடன் திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா விரைவில் மத்திய அமைச்சராவார் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

   

சி.டி.ஆர். நிர்மல்குமாரின் இந்த கடுமையான விமர்சனத்திற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் ஏற்கனவே அதனை எதிர்த்துத் தோற்கடித்துள்ளதாகவும் தெரிவித்தார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பில் இருந்த சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு திமுகவை விமர்சிக்க எந்த யோக்கியதையும் இல்லை என்றும், அவர் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கட்சிக்கு மாறுபவர் என்றும் ஆர்.எஸ். பாரதி காட்டமாகக் கூறினார்.

 

தொடர்ந்து பேசிய ஆர்.எஸ். பாரதி, “நடிகர் தனுஷ் அல்லது அண்ணாமலை என யார் புதிதாகக் கட்சி தொடங்கினாலும், உடனே அங்கு சென்று உறுப்பினர் அட்டை வாங்கிக் கொள்வது சிலருக்கு பாரம்பரியமான பழக்கம்” என்று கிண்டலடித்தார். அந்தப் பட்டியலில் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முதன்மையாக இருப்பார்கள் எனக் குறிப்பிட்ட அவர், தவெக ஆட்சியில் நடைபெறும் கோவை மாணவர் கொலை மற்றும் தூத்துக்குடி பெண் புகாரில் நடவடிக்கை எடுக்காதது போன்ற சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளை மறைப்பதற்காகவே இதுபோன்ற வீணான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் கூறி தன் உரையை நிறைவு செய்தார்.