கணவன் கண் முன்னே 65 லட்சம் தங்கம் அபேஸ்.. பிணமாகக் கிடந்த மூதாட்டி.. கூட்டத்தில் நின்றே வேடிக்கை பார்த்த ‘சைக்கோ’ கொலையாளி..!!

By Soundarya on மாசி 19, 2026

Spread the love

பெங்களூரு நெலமங்களா பகுதியில் 70 வயது மூதாட்டி ஒருவரை மர்ம நபர் கழுத்தறுத்துக் கொலை செய்து, சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஷோபா என்பவர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகப் படுக்கையிலேயே இருக்கும் தனது கணவர் ரங்கநாத்துடன் வசித்து வந்தார். தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லாத நிலையில், இவர்களது வீட்டிற்குப் பிசியோதெரபி சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர், ஷோபா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்.

இந்தக் கொடூரக் கொலை தொடர்பாக சிவகுமார் என்ற மொத்த வியாபாரியைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த அவர், ஷோபாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த சுமார் 450 கிராம் தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளார். குற்றத்தைச் செய்த பிறகு, எதுவும் தெரியாதது போலக் கூட்டத்தோடு கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்த சிவகுமாரை, சிசிடிவி காட்சிகள் மற்றும் வாகனப் பதிவு எண்ணை வைத்துப் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். பண நெருக்கடி காரணமாகவே அவர் இந்தத் துணிகரக் கொலையைச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.