தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் சொந்தமாக முன்னேறும் வகையில் அரசு பல்வேறு கடன் உதவி திட்டங்கள், மகளிர் உரிமைத்தொகை மற்றும் விடியல் பயணம் திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் தற்போது சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களின் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வணிக ரீதியிலான கிரைண்டர் வாங்க தமிழக அரசு உதவி வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க சென்னை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் தற்போது அறிவுறுத்தி வருகிறார்கள். அதன்படி கிரைண்டர் விலையில் மானியமாக 50 சதவீதம் அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான பெண்கள் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
