தமிழகத்தில் மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 வழங்கும் திட்டத்தை மிக விரைவாகச் செயல்படுத்துவதற்கான பணிகளில் முதலமைச்சர் விஜய் தீவிரமாக இறங்கியுள்ளார். இது தொடர்பாக, நேற்று முன்தினம் நிதித்துறை செயலாளருடன் அவர் அவசர ஆலோசனை மேற்கொண்டதோடு, இத்திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் கீர்த்தனா ஆகியோர், மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இந்த ₹2,500 உதவித்தொகை வழங்கும் திட்டம் மிக விரைவில் முறைப்படி தொடங்கப்பட்டு, பயனாளிகளின் கணக்கில் செலுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளனர். அரசின் இந்த வேகமான நடவடிக்கைகள் தமிழகப் பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
