பஞ்சாப் மாநிலம் கோட்காபுராவைச் சேர்ந்த பிம்லா தேவி என்ற பெண்மணி, தனது குழந்தைகளுக்குத் துணி வாங்கச் சென்ற இடத்தில் வாங்கிய வெறும் ரூ.7 லொட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தினக்கூலித் தொழிலாளியின் மனைவியான பிம்லா தேவி, அங்குள்ள ரயில்வே சாலை அருகிலுள்ள ஸ்டார் லொட்டரி கடையில் சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டை தற்செயலாக வாங்கியுள்ளார்.
அடுத்த நாள் முடிவுகள் வெளியானபோது, அவர் ரூ.1 கோடி பரிசை வென்றதாகக் கடை உரிமையாளர் நரேஷ் மோங்கா தகவல் தெரிவித்துள்ளார். செய்தி அறிந்து கடைக்கு வந்த குடும்பத்தினர், இனிப்புகள் வழங்கி பங்க்ரா நடனமாடி தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளனர். இந்தத் தொகையைக் கொண்டு குடும்பத்தின் எதிர்காலப் பாதுகாப்பிற்காகவும், பிள்ளைகளின் படிப்பு மற்றும் சொந்தத் தொழில் தொடங்குவதற்காகவும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
