ராஜஸ்தான் மாநிலத்தில் 22-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் முக்கிய உறுப்பினரான ஹரிசந்த் ஜாட் என்ற ஹரி பாக்சர், அமெரிக்காவில் குடியேற்றத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இணையத்தில் பரவலாக அறியப்படும் சட்டவிரோத “டங்கி” வழித்தடத்தைப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் ஹரி பாக்சர் அமெரிக்காவிற்குள் நுழைந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரது நடமாட்டம் குறித்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஹரி பாக்சரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ராஜஸ்தான் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் பல்வேறு கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் போன்ற கடுமையான குற்றங்களில் தொடர்புடைய இவரை, தூதரக வழிமுறைகள் மூலம் விரைவில் நாடு கடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
