பெங்களூரில் ஒரு சிறிய சாலை விபத்து காரணமாக ஆத்திரத்தில் இளைஞர் ஒருவரை தம்பதியினர் துரத்திச் சென்று காரால் மோதி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் குமார் மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி சர்மா ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தபோது தர்ஷன் மற்றும் வருண் ஆகியோர் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் காரின் கண்ணாடியில் லேசாக உரசி உள்ளது. இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த அந்த தம்பதி இருசக்கர வாகனத்தை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று வேண்டுமென்றே தங்களுடைய காரால் மோதியுள்ளனர்.
இந்த தாக்குதலில் தர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்கு பிறகு தப்பிச்சென்ற தம்பதி பிறகு முகமூடி அணிந்து திரும்பி வந்து விபத்துக்கான தடயங்களை அகற்ற முயன்று உள்ளனர். மேலும் அவர்கள் இளைஞர்களை இரு முறை மோதி தாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலில் விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த சம்பவம் தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. ஒரு சாதாரண விஷயத்துக்காக 2 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பரிதாபமாக இளைஞரை கொலை செய்த தம்பதியினரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
