திமுக அரசுக்கு ‘குட் நியூஸ்’…. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் மாற்றம்… தமிழகத்தின் அடுத்த ஆளுநர் யார்?….!

By Nanthini on பங்குனி 6, 2026

Spread the love

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு ஆர்.என்.ரவியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தற்போது கேரளா ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் கர்லேக்கர், தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், புதிய ஆளுநர் நியமனம் குறித்து மாநில அரசுடன் முறையான ஆலோசனைகள் ஏதும் நடத்தப்படவில்லை என்றும், இத்தகைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் விமர்சித்துள்ளார். சி.வி. ஆனந்த போஸின் திடீர் ராஜினாமா தமக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் மோதல் போக்கிற்கு மத்தியில் இந்த இடமாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் மாற்றப்படுவது அரசியல் ரீதியாகப் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான முரண்பாடுகள் இதன் மூலம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.