நடிகர் சூர்யாவின் நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்திற்குத் தியேட்டர்களில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், அனகா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜி பல்வேறு ஊர்களில் உள்ள திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். அந்த வகையில், திண்டுக்கல் சென்ற அவர் அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்து, படத்தில் தான் ஏற்றுள்ள ‘பேபி கண்ணன்’ என்ற எதிர்மறைக் கதாபாத்திரம் குறித்தும், இனி வரும் காலங்களில் வில்லனாக நடிப்பது குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது, தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நானே ஒரு படம் இயக்கி, எனக்காகப் பார்த்துப் பார்த்து எழுதிய தனித்துவமான கதாபாத்திரம்தான் ‘பேபி கண்ணன்’. மற்ற இயக்குநர்கள் யாராவது எனக்காக இது போன்ற சுவாரஸ்யமான கதைகளை எழுதினால் தாராளமாக நடிப்பேன். இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து நான் கதாநாயகனாக நடிக்கும் சில படங்கள் வரிசையில் உள்ளன” என்று தெளிவுபடுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், ‘கருப்பு’ திரைப்படத்தின் அடிப்படைக் கரு உருவான விதம் குறித்த சுவாரஸ்யமான பின்னணியையும் செய்தியாளர்களிடம் விவரித்தார்.
ஒருமுறை பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலுக்குச் சென்றபோது, தீராத பகைகள் தீர அம்மனுக்கு மிளகாய் அரைத்துத் தடவி மக்கள் நியாயம் கேட்கும் வழக்கத்தைக் கேள்விப்பட்டதாகக் கூறினார். பின்னர், தான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சென்னை பேஸின் பிரிட்ஜ் சிக்னலில் மர்ம நபர்களால் கத்திமுனையில் பறிக்கப்பட்ட தனது நகையை, நீதிமன்ற அலைச்சல்களுக்குப் பிறகு மீட்ட நிஜ வாழ்க்கைச் சம்பவமும் அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது. இந்த இருவேறு புள்ளிகளையும், அதாவது மாசாணியம்மன் கோவில் நம்பிக்கையையும், தனக்கு நடந்த திருட்டுச் சம்பவத்தையும் இணைத்து உருவாக்கியதுதான் ‘கருப்பு’ படத்தின் கதை என்றும், இந்த யோசனைக்குக் கடவுளே காரணம் என்றும் ஆர்.ஜே. பாலாஜி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
