சென்னை மற்றும் நாடு முழுவதும் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் கிலோ ரூ. 50 வரை விற்கப்பட்ட சர்க்கரை, நேற்றைய நிலவரப்படி ரூ. 70 ஆக அதிகரித்துள்ளது. ஓணம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி போன்ற அடுத்தடுத்த பண்டிகை காலங்கள் நெருங்கும் வேளையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்களைப் பெரிதும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
பிரேசிலில் இருந்து சர்க்கரை விநியோகம் பாதிக்கப்பட்டது, கரும்பு உற்பத்தியில் எல் நினோ ஏற்படுத்திய தாக்கம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் ஆகியவையே சர்க்கரை விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடையை விதித்துள்ளது.
நம் நாட்டில் பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டம் 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் எத்தனால் தயாரிப்புக்காக சுமார் 30 லட்சம் டன் சர்க்கரை திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும், இதுவே விலை உயர்வுக்குக் காரணம் எனவும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், இத்தகைய விலை உயர்வுக்கும் எத்தனால் தயாரிப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
