அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால், தமிழகத்தில் சமையல் எண்ணெய் விலையும் ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள விநியோகச் சங்கிலி பாதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை சமையல் எண்ணெய் இறக்குமதிச் செலவை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் சூரியகாந்தி எண்ணெய் (சன்பிளவர் ஆயில்) விலை கணிசமாக அதிகரித்துள்ளது. முன்னதாக ஒரு லிட்டர் ரூ. 155-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது அது ரூ. 170-ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் பாமாயில் விலையும் லிட்டருக்கு ரூ. 10 முதல் ரூ. 15 வரை உயர்ந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஆகியவற்றின் விலையும் லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ. 4 வரை அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீர்ச்சந்தி (Strait of Hormuz) மற்றும் செங்கடல் பகுதியில் நிலவும் பதற்றத்தால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் சமையல் எண்ணெய் விலையில் மேலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது
