திமுகவில் மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட செயலாளர்களுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே ஒருவித இடைவெளி உருவாகியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில், மாவட்ட செயலாளர்களுடன் அவர் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்து வந்தார்.
ஆனால் தற்போதைய அமைப்பில், மண்டல பொறுப்பாளர்கள் மூலமாகவே மா.செ.க்களின் கோரிக்கைகள் மற்றும் மாவட்டப் பிரச்சனைகள் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்குச் செல்வதால், தங்களின் நேரடி அதிகாரம் மற்றும் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். இந்த புதிய அடுக்கு முறை தங்களுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், பழையபடி தலைமையுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் வழக்கத்தையே மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் மா.செ.க்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
