சகாராம்பூர் அருகே உள்ள சர்சாவா பகுதியில், வருவாய் துறை அதிகாரியான அசோக் ரதி (40), தனது தாய் வித்யாவதி (70), மனைவி அஞ்சிதா (37) மற்றும் மகன்கள் கார்த்திக் (16), தேவ் (13) ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், அசோக் ரதி தனது குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரையும் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து மூன்று நாட்டுத் துப்பாக்கிகளைப் போலீஸார் மீட்டுள்ளனர்.
இந்த வழக்கில் அசோக் ரதியின் மொபைல் போன் முக்கியத் தடயமாக மாறியுள்ளது. அவர் உயிரிழப்பதற்கு முன், அதிகாலை 3 மணியளவில் தனது உறவினருக்கு, “நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன்” என்று வாட்ஸ்அப் செய்தி அனுப்பியுள்ளார். மேலும், தனது குடும்பம் அழிந்துபோக விடமாட்டேன் என்றும், சொத்தில் ஒரு பங்கைப் பெற்றுத் தருவேன் என்றும் அந்தச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.
நகூர் தாலுகாவில் வசூல் அதிகாரியாகப் பணியாற்றி வந்த அசோக் ரதி, கடந்த சில நாட்களாகக் கடுமையான மன உளைச்சலில் அல்லது நிதி நெருக்கடியில் இருந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவரது குறுஞ்செய்தியில் சொத்து குறித்துக் குறிப்பிட்டிருந்ததால், குடும்பத்திற்குள் இருந்த சொத்துத் தகராறு அல்லது பணப் பிரச்சினைகள் இந்த விபரீத முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தற்போது இது ஒரு ‘கொலை மற்றும் தற்கொலை’ வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
