வங்கி வாடிக்கையாளர் ஒருவர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால், அவரது சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தை உறவினர்கள் எவ்வாறு எளிதாகப் பெறுவது என்பது குறித்த விழிப்புணர்வு தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கி வாட்ஸ்அப் வாயிலாகப் பகிர்ந்து வருகிறது. தற்போது இந்த நடைமுறை குறிப்பிட்ட காலக்கெடுவுடன் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறந்தவரின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட வங்கி கிளை அல்லது வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதற்கான உரிமை கோரல் படிவத்தைப் பூர்த்தி செய்து முறையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு முறையாக விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு தீர்வு வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தப் பணத்தை உரிமை கோரும் நடைமுறையை மேலும் விரைவாகவும் எவ்வித சிக்கலின்றியும் முடிக்க, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் வாரிசுதாரர் பெயர் சேர்க்கப்பட்டிருப்பது மிகவும் அவசியமாகும். கணக்கில் ஏற்கனவே வாரிசுதாரர் பதிவு செய்யப்பட்டிருந்தால், குடும்பத்தினர் அந்தப் பணத்தை மிக எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, தங்களுக்குப் பின் தங்கள் அன்புக்குரியவர்கள் எவ்வித சிரமமுமின்றி பணத்தைப் பெறுவதை உறுதி செய்ய, வாடிக்கையாளர்கள் அனைவரும் தாமதிக்காமல் உடனடியாகத் தங்களது வங்கிக் கணக்கில் வாரிசுதாரர் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
