கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நெடுவத்தூர் பகுதியை சேர்ந்த அர்ச்சனா (33) என்ற பெண் எண்பது அடி கிணற்றில் குதித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அவரைக் காப்பாற்று முயற்சியில் ஈடுபட்டனர். சோனி குமார் என்ற தீயணைப்பு வீரர் பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றில் இறங்கி அர்ச்சனாவை காப்பாற்ற முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் சுவர் இடிந்து கிணற்றுக்குள் இருந்த குமார் மற்றும் அர்ச்சனா மீது விழுந்துள்ளது. அதேசமயம் கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்த அர்ச்சனாவின் நண்பரான சிவ கிருஷ்ணன் என்பவரும் தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர்கள் மூன்று பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் அர்ச்சனாவுக்கும் சிவ கிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனால் அர்ச்சனா கிணற்றுக்குள் குதித்ததும் தெரியவந்துள்ளது. கிணற்றுக்குள் குதித்த பெண்ணை காப்பாற்ற முயன்று மூன்று உயிர் பறிபோன சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
