தாய்லாந்தைச் சேர்ந்த குன் குவாங் என்ற பெண், தனது கணவரின் துரோகத்தை ஒரு நூதனமான வருமான வாய்ப்பாக மாற்றிய விசித்திரமான சம்பவம் உலகளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரியான தனது கணவர், வேறொரு பெண்ணுடன் ரகசியத் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த குவாங், அழுவதற்கோ அல்லது விவாகரத்து செய்வதற்கோ முற்படாமல், ஒரு தனியார் துப்பறியும் நபரை வேலைக்கு அமர்த்தினார். ஒரு நாளைக்கு சுமார் 25,000 ரூபாய் செலவழித்து, தனது கணவரை கையும் களவுமாகப் பிடித்த அவர், அதன் பிறகு எடுத்த முடிவுதான் அனைவரையும் அதிர வைத்தது.
தாய்லாந்தின் புகழ்பெற்ற “ஹோன்-க்ராசே” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குவாங், தனது கணவரின் காதலிக்கு ஒரு விசித்திரமான நிபந்தனை விதித்ததாகக் கூறினார். தனது கணவருடன் அவர் தொடர்ந்து வாழ விரும்பினால், அதற்கு வாடகையாக மாதம் தோறும் 30,000 பாட் (இந்திய மதிப்பில் சுமார் 85,000 ரூபாய்க்கு மேல்) தனக்குச் செலுத்த வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. ஆச்சரியப்படும் விதமாக, அந்தப் பணத்தைச் செலுத்தத் தயார் என்று காதலி உடனடியாக ஒப்புக்கொண்டார். ஆனால், தன்னை ஒரு பொருளைப் போல வாடகைக்கு விடுவதா என்று கணவர் சுயமரியாதை பாதிக்கப்பட்டு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் கதையில் புதிய திருப்பம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவிய நிலையில், தாய்லாந்து சட்ட வல்லுநர்கள் இது போன்ற “கணவன்-வாடகை ஒப்பந்தம்” சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகாது என்று எச்சரித்துள்ளனர். ஒருதார மண விதிகளை மீறும் இத்தகைய ஒப்பந்தங்களுக்குச் சட்ட அங்கீகாரம் கிடையாது என்று அவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும், தனது முயற்சியில் சற்றும் தளராத குவாங், தற்போது தனது கணவரின் காதலிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். துரோகத்திற்குத் தண்டனையை விட ‘வாடகை’ வசூலிப்பதே மேல் என அவர் எடுத்த முடிவு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
