கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை அடுத்த பெரியவிளை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஞானசெல்வத்தின் மகள் ஏஞ்சல் (26), தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பொக்லைன் இயந்திர ஆபரேட்டரான ஆன்டனிராஜ் (30) என்பவர் ஏஞ்சலை ஒருதலையாகக் காதலிப்பதாகக் கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஏஞ்சல் காதலை ஏற்க மறுத்ததுடன், இதுகுறித்துத் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், காவல்துறையினர் ஆன்டனிராஜை அழைத்து எச்சரித்துள்ளனர்.
ஆனால், “உன்னால் தான் போலீசார் என்னை எச்சரித்தனர்” என்று கூறி ஆன்டனிராஜ் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த ஏஞ்சல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த ஏஞ்சலின் குடும்பத்தினரும் உறவினர்களும், அங்கு வந்த ஆன்டனிராஜைக் கையில் கிடைத்த கற்கள் மற்றும் கட்டைகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஆன்டனிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கன்னியாகுமரி காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
