தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டு வருகின்றது. இருந்தாலும் தங்கள் கூட்டணி பலமாக இல்லாததால் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அதிமுக உடைந்து கிடக்கும் நிலையில் அனைவரும் ஒன்று சேர்ந்தால் கட்டாயம் வெற்றி கிடைக்கும் என ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் இபிஎஸ் தனி ஆளாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் நிபந்தனை இன்றி அதிமுகவில் இணைய தயார் என்று கூறியதற்கு, இணைக்க மாட்டோம் என்று கடந்த வாரம் இபிஎஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று ஒன்றிணைய வேண்டும் என ஈபிஸ்க்கு மீண்டும் ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து மூத்த தலைவர்கள் இபிஎஸ் இடம் ஆலோசிக்கையில், அவரை நீக்கியது நீக்கியதுதான், மீண்டும் இணைப்பு குறித்து பேச வேண்டாம் என்று கூறி இபிஎஸ் முற்றுப்புள்ளி வைத்து விட்டாராம்.
