“எம்எல்ஏ சீட்ல நாங்களும் உட்காருவோம்ல” வாங்கப்பா யாருனாலும் உட்காரலாம்.. எம்எல்ஏ ஆபீஸில் தவெகவினர் நடத்திய ரீல்ஸ் அட்ராசிட்டி..!!

By Soundarya on ஆனி 1, 2026

Spread the love

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அமைந்துள்ள சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில், தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் எம்எல்ஏ இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ கருப்பையா, கிழக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கார்த்திகேயனுடன் இணைந்து நேற்று தனது புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இருப்பினும், தவெக மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணா விழாவுக்கு வருவதற்கு முன்பாகவே அலுவலகம் திறக்கப்பட்டதால், கட்சி நிர்வாகிகளிடையே தொடக்கத்திலேயே சலசலப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில், விழாவிற்கு வந்திருந்த சில தவெக நிர்வாகிகள், அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த எம்எல்ஏவின் அதிகாரப்பூர்வ இருக்கையில் மாறி மாறி அமர்ந்து, ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி விவாதத்தை கிளப்பியுள்ளன.

   

இதற்கிடையில், தாமதமாக வந்த மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணாவை சமாதானப்படுத்தும் விதமாக, அவர் முன்னிலையில் மீண்டும் ஒருமுறை குத்துவிளக்கேற்றி திறப்பு விழா கொண்டாடப்பட்டது. ஒரே நாளில் இரண்டு முறை அலுவலகம் திறக்கப்பட்டதும், கட்சி நிர்வாகிகளின் அத்துமீறிய ரீல்ஸ் கொண்டாட்டங்களும் சோழவந்தான் அரசியல் வட்டாரத்தில் தற்போதைய பரபரப்பு பேச்சாக மாறியுள்ளது.