“வாட்ஸ்அப் யூசர்நேம் வசதிக்கு ரெட் கார்டு..! மத்திய அரசு திடீர்.. கட்டுப்பாடு விதித்தது ஏன்…?”

By Swetha on ஆடி 2, 2026

Spread the love

பயனர்கள் தங்களது மொபைல் எண்களைப் பகிராமல், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் செயலிகளைப் போல தங்களுக்கு விருப்பமான தனித்துவமான ‘யூசர்நேம்’ மூலம் மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது. பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட இருந்த இந்த வசதி மூலம், அறிமுகமில்லாத நபர்களிடம் மொபைல் எண்ணை கொடுக்கத் தேவையில்லை என்ற சாதகமான அம்சம் இருந்தாலும், இதன் பின்னணியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த கவலைகளும் எழுந்துள்ளன.

இந்த புதிய ‘யூசர்நேம்’ வசதியைப் பயன்படுத்தி, மோசடி செய்பவர்கள் அரசு அதிகாரிகள், பிரபலங்கள் அல்லது வங்கிப் பிரதிநிதிகள் போன்ற போலியான பெயர்களில் கணக்குகளை உருவாக்கி மக்களை எளிதாக ஏமாற்ற முடியும் என மத்திய அரசு அஞ்சுகிறது. மேலும், மொபைல் எண்கள் மறைக்கப்படுவதால் ஆன்லைன் நிதி மோசடிகள், ஃபிஷிங் மற்றும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ போன்ற அதிநவீன சைபர் குற்றங்கள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்றும், குற்றவாளிகளின் உண்மையான அடையாளத்தைக் கண்டறிவதில் புலனாய்வு அமைப்புகளுக்கு பெரும் சவால் ஏற்படும் என்றும் அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

   

இந்த கடுமையான பாதுகாப்புச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அவசர நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இந்த புதிய வசதி குறித்த முழுமையான மற்றும் விரிவான விளக்கத்தை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுகுறித்த முறையான ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் முடிவடைந்து, அரசின் முழுமையான திருப்தி ஏற்படும் வரை இந்த ‘யூசர்நேம்’ அம்சத்தை இந்தியாவில் தற்காலிகமாக அமல்படுத்தக் கூடாது என்றும் மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.