தனிநபர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பாதுகாப்பாகச் சேமிக்க தபால் நிலையத் தொடர் வைப்புத் திட்டம் (Post Office RD) ஒரு சிறந்த வாய்ப்பாகும். இத்திட்டத்தில் நீங்கள் மாதம் வெறும் 100 ரூபாய் முதல் உங்கள் வசதிக்கேற்ப எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். 2026 ஏப்ரல் – ஜூன் காலாண்டிற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் கால அளவைக் கொண்ட இத்திட்டத்தில், அசல் தொகையுடன் வட்டியும் சேர்ந்து காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்படுவதால், உங்களின் சிறிய சேமிப்பும் விரைவாகப் பெரிய தொகையாக வளரும்.
உதாரணமாக, நீங்கள் மாதம் 10,000 ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து டெபாசிட் செய்தால், உங்களின் மொத்த முதலீடு 6,00,000 ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டியாக மட்டும் சுமார் 1,13,659 ரூபாய் கிடைப்பதால், முதிர்வு காலத்தில் மொத்தம் 7,13,659 ரூபாயைக் கையில் பெறலாம். ஒரு வருடத் தொடர் சேமிப்பிற்குப் பிறகு, உங்கள் இருப்பில் 50 சதவீதம் வரை அவசரத் தேவைகளுக்காகக் கடனாகப் பெறும் வசதியும் உள்ளது. அரசு உத்தரவாதம் கொண்ட இத்திட்டம், இல்லத்தரசிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் எதிர்காலத் தேவைகளுக்காகப் பணத்தைச் சேமிக்க மிகவும் உறுதுணையாக இருக்கும்.
