தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை, சில தவிர்க்க முடியாத காரணங்களால் இதுவரை வாங்க முடியாதவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் அல்லது உடல்நலக் குறைவால் நியாயவிலைக் கடைகளுக்கு வர இயலாதவர்கள் என சுமார் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் இன்னும் இந்த பரிசைப் பெறவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, விநியோகக் காலத்தை நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.3,000 ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு நீள கரும்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஜனவரி 14-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் பல குடும்பங்கள் விடுபட்டுள்ளதால், இந்த மாதம் இறுதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக அரசு தரப்பிலிருந்து ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
