திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் குமாஸ்தாவாக பணிசெய்தவர் ரவிக்குமார். கோவில் உண்டியல் காணிக்கை பிரிவில் பணிசெய்த அவர் ரூ. 100 கோடி வரை பல ஆண்டுகளாக கோவில் உண்டியல் பணத்தில் கையாடல் செய்தது கடந்த 2023ம் ஆண்டில் தெரிய வந்தது. திருடிய உண்டியல் பணத்தை கொண்டு பல இடங்களில் சொத்துகள் வாங்கியதும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரின்படி ரவிக்குமார் மீது மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்தது.
அப்போது கோவில் உண்டியல் பணத்தில் வாங்கிய சொத்துகளில் 90 சதவீதம் வரை திருப்பதி கோவிலுக்கே அவர் எழுதி வைத்து விடுவதாக உத்தரவாதம் அளித்த நிலையில் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த சூழலில் அவர் மீது பலவிதமான வதந்திகள் பரவி வருகிறது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட ரவிக்குமார், கோவில் உண்டியல் பணத்தில் ரூ. 100 கோடி வரை திருடியது உண்மைதான். நானும் என் குடும்பமும் கடும் மன உளைச்சலில் இருக்கிறோம். என் மீது அவதூறான வதந்திகளை பரப்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.
