பாதிக்கப்பட்ட பெண் அரசு வழங்கிய இலவச தானியத்தைப் பெறச் சென்றபோது, நியாயவிலைக் கடை ஊழியர்கள் அவமரியாதையாக நடந்து கொண்டதுடன், தானியம் தரவும் மறுத்துள்ளனர். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் திட்டத்தில் இதுபோன்று அலட்சியமாகவும் தரக்குறைவாகவும் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது.
பாதிக்கப்பட்டவர் தனது உரிமையைக் கேட்கும்போது, “யாருக்கு வேண்டுமானாலும் வீடியோ எடுத்து அனுப்பு, எங்களுக்குப் பயமில்லை” என்று ஊழியர்கள் அதிகார தோரணையில் கூறியிருப்பது அவர்களின் அராஜகமான போக்கை வெளிப்படுத்துகிறது. ஏழைகளின் பசியைப் போக்க அரசு வழங்கும் திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே இப்படிப் பொறுப்பற்ற முறையில் நடப்பது ஏற்க முடியாதது.
எனவே, ஏழைப் பெண்களிடம் அவமரியாதையாக நடந்துகொண்ட அந்தப் பெண் ஊழியர் மற்றும் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். நியாயமற்ற முறையில் செயல்பட்ட நபர்களின் ரேஷன் உரிமத்தை உடனடியாக ரத்து செய்து, தகுந்த சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
