ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்… விரல் ரேகை பதிவு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் சான்ஸ்… தமிழக அரசு அறிவிப்பு….!

By Nanthini on ஆவணி 6, 2026

Spread the love

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் வசதிக்காக ரேஷன் அட்டைகளில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் பிற விவரங்களைத் திருத்தம் செய்வதற்கான மாதாந்திர மக்கள் குறைதீர் முகாம் வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 8 அன்று நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்தச் சிறப்பு முகாம் இயங்கும்.

இந்தக் குறைதீர் முகாமில் குடும்ப அட்டையில் புதிய பெயர்களைச் சேர்த்தல், பெயர்களை நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் மற்றும் தொலைபேசி எண்ணைப் பதிவு செய்தல் போன்ற சேவைகள் உடனடியாகச் செய்து தரப்படும். மேலும், நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் வர இயலாத மூத்த குடிமக்களுக்குப் பதிலாக வேறு நபர்கள் பொருட்கள் பெறுவதற்கான அங்கீகாரச் சான்றும் இங்கு வழங்கப்படும். இச்சேவைகள் அனைத்தும் குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) மூலமாகவே மேற்கொள்ளப்படும் என்பதால், பொதுமக்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசியுடன் மண்டல அலுவலகங்களை அணுக வேண்டும்.

   

இதனிடையே, போலியான குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து நீக்குவதற்காகக் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகைப் பதிவை (eKYC) சரிபார்க்கும் பணியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களைப் புதுப்பிக்கக் கடந்த அக்டோபர் 2023 முதல் இப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை சுமார் 95.86% அளவிலான eKYC சரிபார்ப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

   

இந்நிலையில், விடுபட்ட 100% விரல்ரேகைப் பதிவையும் விரைந்து முடிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 8 மற்றும் 9 (08.08.2026 & 09.08.2026) ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு eKYC முகாம் நடைபெறவுள்ளது. காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ள இச்சிறப்பு முகாமினைப் பயன்படுத்தி, இதுவரை விரல்ரேகைப் பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தங்களது eKYC பதிவை உடனடியாகச் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.